Monday 2 May 2011

நெருங்கும் அட்சய திருதியை: எகிறும் தங்க விலை!

சென்னை: அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து 3 மாதங்களாக வீழ்ச்சி அடைந்து வருவதால் தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.232 உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் மே 6-ம் தேதி அட்சய திருதியை என்பதால் இன்னும் விலை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


பங்குகளை வாங்குவதைவிட தங்கத்தை வாங்கி விற்பதில் எக்கச்சக்க லாபம் வர ஆரம்பித்துள்ளது. இதனால் சூதாட்டத்தில் ஈடுபடுவதுபோல தங்க நகைகளை வாங்கி விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருவதாலும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவருவதாலும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும் என்று நகைக்கடை அதிபர் ஒருவர் தெரிவித்தார்.

இது மட்டுமின்றி, திருமண சீசன் தொடங்கிவிட்டதாலும் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவருவதாக வியாபாரிகள் கருதுகிறார்கள்.

பவுனுக்கு ரூ.232 உயர்வு:

கடந்த 25-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.16,472-க்கு விற்பனையானது. மறுநாள் பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.16,272 ஆக இருந்தது. மறுநாள் மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.16,320-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.232 அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.16,552-க்கு விற்பனையானது. ஒரு பவுன் தங்கம் ரூ.17 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அட்சய திருதியை:

ஆனாலும் சென்னையில் நகைக் கடைகளில் விற்பனை குறையவில்லை. இந்த வறுத்தெடுக்கும் வெயில், பாக்கட்டை சுடும் விலை என எல்லா பாதக அம்சங்கள் இருந்தாலும், தங்கத்தை தேடி வரும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது, நகைக்கடைக்காரர்களை சந்தோஷத்தில் மூழ்கடித்துள்ளது.

அட்சய திருதியை வேறு நெருங்குவதால் (மே 6), எவ்வளவு விலை உயர்ந்தாலும் விற்பனை குறைய வாய்ப்பே இல்லை என்கிறார்கள் சென்னை தங்க நகை வியாபாரிகள்.

No comments:

Post a Comment