Wednesday 4 May 2011

அருணாச்சலப் பிரதேச முதல்வர் டோர்ஜி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!

 

அருணாச்சல பிரதேச முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நொறுங்கியது தெரியவந்துள்ளது. இதில் முதல்வர் டோர்ஜி காண்டு உள்பட 5 பேரும் பலியாகிவிட்டனர். ஐந்து நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு அடர்ந்த காட்டுப் பகுதியில் டோர்ஜியின் உடல் இன்று காலை அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு, கடந்த 30ம் தேதி காலை தவாங் பகுதியில் இருந்து தலைநகர் இடாநகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
அவருடன் பாதுகாப்பு அதிகாரி சோடாக், கேப்டன்கள் பாபர், மானிக் மற்றும் தவாங் தொகுதி எம்எல்ஏவின் சகோதரி லாமு ஆகியோரும் சென்றனர். புறப்பட்ட 20வது நிமிடத்தில் ஹெலிகாப்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற தகவல் பரவியதால் மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் பூடானில் ஹெலிகாப்டர் தரையிறங்கியதாகவும் முதல்வர் பத்திரமாக இருப்பதாகவும் செய்திகள் வந்தன. இந்தச் செய்தியை மறுத்த பூடான் அரசு, தங்கள் பகுதியில் ஹெலிகாப்டர் எதுவும் தரையிறங்கவில்லை என தெரிவித்தனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ராணுவ விமானங்களும் ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. வான்வழி தேடுதலுடன், 4 ஆயிரம் பேர் கொண்ட மீட்புக் குழுவினரும் காட்டுப்பகுதிக்குள் நுழைந்து தேடினர். ஹெலிகாப்டர் மாயமான இடம் அடர்ந்த காட்டுப்பகுதி என்பதாலும் மோசமான வானிலை காரணமாகவும் கடந்த 4 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மாயமான ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க இஸ்ரோ உதவி கோரப்பட்டது. செயற்கைகோள் மற்றும் சுகாய் போர் விமானங்கள் எடுத்த படங்களில் காட்டுப் பகுதிக்குள் சில உலோக துண்டுகள் கிடப்பது தெரியவந்தது. அது ஹெலிகாப்டரின் பாகங்களாக இருக்கலாம் என கூறப்பட்டது. அந்த பகுதியில் நேற்று தேடுதல் வேட்டை நடந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் காட்டுக்குள் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட இந்தோ-திபெத் எல்லைப் படையினர் தயாராயினர். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் செல்ல முடியாததால் இந்த முயற்சியும் பயனளிக்கவில்லை.

இதற்கிடையே, முதல்வர் டோர்ஜி சென்ற ஹெலிகாப்டர் என்ன ஆனது என்பது பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று அருணாச்சல பிரதேச அரசு நேற்று அறிவித்தது. இன்று 5வது நாளாக பூடான் எல்லைப் பகுதிகளில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. 6 ராணுவ ஹெலிகாப்டர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டன. அதிகாலை 5.05 மணிக்கு அசாமின் தேஸ்புர் விமான தளத்தில் இருந்து 4 ஹெலிகாப்டர்களும், தவாங் விமான தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய விமானப்படை செய்தி தொடர்பாளர் ரஞ்சீப் சாகூ தெரிவித்தார்.

இந்நிலையில், மாயமான ஹெலிகாப்டர் லுகுதாங் பகுதியில் நொறுங்கிக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தவாங்கில் இருந்து டோர்ஜியுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் சேலா பாஸ் என்ற இடத்தின் அருகே சென்றபோதுதான் மாயமானது. அந்தப் பகுதிக்கு அருகில்தான் லுகுதாங் உள்ளது. ஹெலிகாப்டர் நொறுங்கிக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டதும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்தனர். அடர்ந்த காட்டுப் பகுதியில் முதல்வர் டோர்ஜி மற்றும் சிலரது உடல்கள் சிதறிக் கிடந்தன. விபத்து நடந்து 5 நாட்களாகிவிட்டதால் உடல்கள் அழுகிய நிலையில் இருந்தன.

அவற்றை மீட்டு இடாநகருக்கு கொண்டுவரும் பணி ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.டோர்ஜி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதி செய்துள்ளார். ஹெலிகாப்டர் நொறுங்கிக் கிடந்த இடத்தில் இருந்து 3 உடல்கள் மீட்கப்பட்டதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி நல்லமலா என்ற இடத்தின் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். இப்போது அருணாச்சல பிரதேச முதல்வரும் ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகியுள்ளார்.

No comments:

Post a Comment