Wednesday 4 May 2011

கரும்பு விவசாயிகளுக்கு எஸ்.எம்.எஸ்., சேவை:அமராவதி சர்க்கரை ஆலை ஏற்பாடு

மடத்துக்குளம் : அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு, கரும்பு குறித்த தகவல்களை உடனுக்குடன் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் சேவை துவங்கியது. மடத்துக்குளம் அருகேயுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2010-2011ம் ஆண்டுக்கான அரவைப்பருவம் ஏப்.16ல் தொடங்கி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டு அரவைக்காக 5,414 ஏக்கர் கரும்பு முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 150 நாட்களுக்கு நடக்கும் அரவையில் 9.75 சதவீத கட்டுமானத்தில் 1,84,275 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு எடையளவு தொகை குறித்த விபரங்கள் பில் வாயிலாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ஆலையில் பதிவு செய்துள்ள 1,661 உறுப்பினர்களுக்கு கரும்பு குறித்து விபரங்களை எஸ்.எம்.எஸ்., வாயிலாக உடனுக்குடன் தெரிவிக்கும் சேவை துவங்கப்பட்டது.இதன்படி எடை மேடைக்கு கரும்பு வந்தவுடன், கரும்பு எடை மற்றும் விலை விபரங்கள் எடைமேடையிலுள்ள கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். அடுத்த வினாடி சம்பந்தப்பட்ட கரும்பு விவசாயிகளின் மொபைல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது. இந்த சேவைக்கான தொடக்கவிழா மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையிலுள்ள எடைமேடை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் சர்க்கரை ஆலை தனி அதிகாரி ராமகிருஷ்ணன், ஊழியர்கள்,மற்றும் கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment