Saturday 30 April 2011

இன்போஸிஸ் புதிய தலைவராக கேவி காமத் அறிவிப்பு!!

நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போஸிஸின் புதிய தலைவராக அந்நிறுவனத்தின் இயக்குநர்  களில் ஒருவரும், ஐசிஐசிஐ வங்கியின் தலைவருமான கே வி காமத் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்போஸிஸ் நிறுவனத்தின் இணை தலைவராக, இப்போதைய சிஇஓவான கே கோபாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்போஸிஸ் நிறுவனத்தின் தலைவராக, அதன் நிறுவனர் என்ஆர் நாராயணமூர்த்தி இருந்து வருகிறார். வரும் ஆகஸ்ட் மாதம் அவர் இந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

இன்போஸிஸ் நிறுவனத்தை கூட்டாக ஆரம்பித்திருந்தாலும், அதனை ஒரு வர்த்தக சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியவர் என்ற பெருமை நாராயணமூர்த்திக்கு உண்டு.

இப்போது அவர் தனது ஓய்வுக்குப் பிறகு பதவி நீட்டிப்பை பெற மறுத்துவிட்டதோடு, புதிய தலைவரைத் தேடுமாறு கடந்த ஆண்டே அறிவித்துவிட்டார். இன்போஸிஸ் குடும்பத்துக்கு வெளியிலிருந்தே இந்த புதியதலைவர்  வரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவரது இந்த முடிவு குறித்து கருத்து கூறிய இன்போஸிஸ் இணை நிறுவனர் டிவி  மோகன்தாஸ் பய், 'வால்ட் டிஸ்னி மறைந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிலையை நினைத்துப் பார்த்து, அத்தகைய சூழலை தவிர்க்க இன்போஸிஸ் முனைய வேண்டும்" என்றார்.

வால்ட் டிஸ்னி இறந்த பிறகு, பொழுதுபோக்குத் துறையில் டாப் இடத்தில் இருந்த டிஸ்னி நிறுவனம் சடசடவென சரியத் துவங்கியது நினைவிருக்கலாம்.

ஏற்கெனவே இன்போஸிஸ் நிறுவனர்கள் நந்தன் நிலகேனி, மோகன்தாஸ் பய், கே தினேஷ் ஆகியோர் விலகியுள்ள நிலையில் இப்போது, நாராயண மூர்த்தியும் ஓய்வு பெறுகிறார்.

நாராயணமூர்த்திக்குப் பிறகு யார் அந்தப் பொறுப்புக்கு வருவார்கள் என பலவேறு கட்டுரைகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், இன்போஸிஸ் நிறுவன இயக்குநர்கள் குழு கூடி, புதிய தலைவராக கேவி காமத்தை நியமித்துள்ளது.

தலைவராக கே வி காமத்

ஐசிஐசிஐ வங்கியின் Non Executive தலைவராக இருப்பவர் கே வி காமத். இன்போஸிஸ் நிறுவன இயக்குநர் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.

ஐசிசிஐ வங்கியை நாட்டின் முதல் நிலை தனியார் வங்கியாக உயர்த்திய பெருமை கேவி காமத்துக்கே உண்டு.

இணை செயல் தலைவராக கே கோபாலகிருஷ்ணன்

இன்போஸிஸ் சிஇஓவாக இருந்து வந்த கோபாலகிருஷ்ணன் இப்போது அதன் இணை செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நாராயணமூர்த்திக்குப் பிறகு இவர்தான் தலைவராக வருவார் என்று கூறப்பட்டது. இப்போது கிட்டத்தட்ட அந்த இடத்தை நெருங்கியிருக்கிறார் புதிய பதவியின் மூலம் கோபால கிருஷ்ணன்.

சிஇஓ எஸ்டி ஷிபுலால்

இன்போஸிஸ் நிறுவனர்களில் ஒருவாரன எஸ்டி ஷிபு லால், நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்போஸிஸ் நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் லாபம் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை என கடந்த காலாண்டு முடிவுகள் தெரிவித்திருந்த நிலையில், இந்த நிர்வாக மாறுதல்கள் நடந்துள்ளன. நந்தன் நிலகேனி விலகிய பிறகு நடந்துள்ள மிகப்பெரிய நிர்வாக மாறுதல் இதுவே. 

எந்த அளவுக்கு, இப்போதைய சவால்களை சமாளிக்க இன்போஸிஸுக்கு இந்த மாற்றம் கைகொடுக்கும் என்பது இனிமேல்தான் தெரியவரும். 

நாராயணமூர்த்தி வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி முறைப்படி ஓய்வு பெறுகிறார். அன்றே கேவி காமத் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கின்றனர்.

No comments:

Post a Comment